எல்லா கடனையும் தள்ளுபடி பண்ணுங்க முதல்வரே..?

*முதல்வரே*

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற முப்பத்தி ஐந்து லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்ற தமிழ்நாடு கூட்டுறவு துறையின் அறிவிப்பு அதிர்ச்சி அளித்துள்ளது.

தேர்தல் சமயத்தின் போது ஐந்து சவரன் நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளித்து அதிகாரத்திற்கு வந்த பிறகு நான்கில் ஒரு பங்கு மட்டுமே மக்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஏமாற்றும் திமுக அரசின் வஞ்சக செயல் கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு விதிமீறல்கள் விவசாயிகள் நகைக்கடன் பெற்றதில் உள்ளதாகக் கூறி, திமுக அரசு நகைக்கடன் தள்ளுபடியை கிடப்பில் போட்டப்போதே, 1000 ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு வழங்குதல், நகைக்கடன் தள்ளுபடியும் நீட் தேர்வு ரத்து என்பதுபோல திமுகவின் தேர்தல் நேரத்து ஏமாற்ற நாடகமோ? என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.

பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்ற நிபந்தனை திமுக அரசின் மோசடித்தனத்தை மொத்தமாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. குறிப்பாக ஏழை விவசாயிகள் வறுமை இயலாமை காரணமாக பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் பெற்ற நிலையில் திமுக அரசு ஒரு வறுமையைக் காரணம் காட்டி மற்றொரு வறுமையைத் தீர்க்க மறுப்பது எவ்வகையில் நியாயமாகும்?

திமுக அரசு தேர்தல் அறிக்கையில் அந்த வாக்குறுதி அடிப்படையில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்ற மக்கள் அனைவருக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி முழுவதுமாக நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.