ஊரடங்கு கட்டுப்பாடு தமிழகத்தில் எப்படி இருக்கும்

*ஊரடங்கு கட்டுப்பாடு*

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுமா என்பது குறித்து அரசின் முக்கிய முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, வெள்ளி சனி ஞாயிறு வழிபாட்டுத்தலங்களுக்கு தடை, ஞாயிறு முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கு கட்டுப்பாட்டை நீடிக்கலாமா என்பது குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அந்தத் துறையின் செயலாளர், அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

மளிகைக் கடைகள் உள்ளிட்டவைகள் செயல்படும் நேரங்களை குறைக்கலாமா, பொங்கல் பண்டிகையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், IT ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்துவது, சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்லுவதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதுதொடர்பான தமிழ்நாடு அரசின் முக்கிய முடிவுகள் இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.